கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
நெகமம்:நெகமம் அருகேயுள்ள பனப்பட்டியில் நேற்று கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.நெகமம் அருகேயுள்ள பனப்பட்டியில், மிகவும் பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்தது. அதில், புதிதாக கருங்கல் திருக்கோவில், கருவறை, விமானம், அர்த்த மண்டபம், கருடகம்பம் போன்ற பணிகள் நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த 5ம் தேதி மாலை, 3:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடந்தது.
பின், மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி, மண் எடுத்தல் போன்றவை நடந்தன. இரவு 7.00 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடந்தது. பின், ஜூன் 6ம் தேதியன்று காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசையை தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. இரவு 10.00 மணியளவில் சிலைகளுக்கு எண்வகை மருந்து சாத்தப்பட்டது.
நேற்று காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசையை தொடர்ந்து, காலை 5.00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும், காலை, 6:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு குமரகுருபர சுவாமிகள், மருதாசல அடிகள் ஆகியோரால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில், பனப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், பக்தர்கள் மீது கும்பாபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. மூலவருக்கு புனித நீர் ஊற்றி அபிசேகம் செய்து, அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.