காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா!
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றதும், முதன்மையான ஸ்தலமாக காரமடை அரங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம், கல்யாண மண்டபம், சுற்றுப்பிரகார மண்டபங்கள் அமைத்து, திருப்பணிகள் செய்யப்பட்டதை அடுத்து, மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையி ல், கோவிலில் அரங்கநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவிலில், அலங்காரம் செய்த மலர் சப்பரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், அரங்கநாத பெருமாள் வீற்றிருந்தார். அர்ச்சகர்கள் புண்ணியாக வாசனம் செய்து, சுவாமிகளுக்கு கங்கணம் கட்டிய பின், பெருமாளுக்கு பூணுால் அணிவித்தனர். தொடர்ந்து, அக்னி மூட்டி, ஹோமங்கள் வளர்த்து, வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்று நிகழ்ச்சி நடந்தது. இரு அர்ச்சகர்கள் மாலையை கையில் எடுத்து, மூன்று முறை ஆடிப்பாடி வந்த பின், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாலை மாற்றும் சடங்கு நடந்தது. பின், திருமாங்கல்யத்துக்கு லட்சுமி பூஜை செய்யப்பட்டது. பிறகு, சுவாமி முன், பிரணவம் வாசிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாங்கல்ய தாரணம் செய்து, சகல வாத்திய ங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, ஸ்தலத்தார்கள் வாரணமாயிரம் பாடல்கள் பாட, பெருமாளின் திருவடிகளை வைத்து அம்மிமிதி சடங்கு நடந்தது. பின், சாற்றுமுறை சேவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. முதன் முறையாக புதிதாக கட்டிய ராஜகோபுர வாசல் வழியாக, திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.