தஞ்சையில் 23 பெருமாள் கருட சேவை உற்சவம்
தஞ்சாவூர் : தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த, 88 கோவில்களில் மாமணி கோவில்கள் சிறப்பு வாய்ந்தது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள், மூன்றாவதாக விளங்குவதுமான மேலசிங்கப்பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள் ஆகியவை மாமணி கோவில்கள், என்றழைக்கப்படுகின்றன. இந்த கோவில்களுடன் இணைந்து, 23 கோவில்களின் கருட சேவையை, ராமானுஜ தர்சன சபை கடந்த, 80 ஆண்டுகளாக, தஞ்சையில் நடத்தி வருகிறது.இந்த ஆண்டு கருட சேவை, 81வது ஆண்டாக, நேற்று, தஞ்சையில் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11 மணி முதல், 1 மணி வரை, மேலசிங்க பெருமாள் கோவிலுக்கு, 23 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.நேற்று காலை, அங்கிருந்து புறப்பட்டு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், நீலமேகர், மணிக்குன்னர் வந்தனர். அவர்களை தொடர்ந்து நரசிம்மர், கல்யாண வெங்கடேசர், வேளூர் வரதராஜர், படித்துறை வெங்கடேசர், தெற்கு வீதி கலியுக வெங்கடேசர், அய்யன்கடை தெரு பஜார் ராமர், பிரசன்ன வெங்கடேசர், கோவிந்தராஜர் ஜனார்த்தனர், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்மர், கோண்டராமர், கீழவீதி வரதராஜர், மேலவாசல் ரெங்கநாதர், மேலவீதி விஜயராமர், நவநீதிகிருஷ்ணன், பள்ளியக்ரகார கோதண்டராமர், சுங்காந்திடல் லட்சுமி நாராயணர், கரந்தை யாதவ கண்ணன், மகர்நோம்புச்சாவடி வெங்கடேசபெருமாள், நவநீத கிருஷ்ணன், கொளுப்பேட்டை தெரு வேணுகோபால ஸ்வாமி ஆகியோர் சுவரிசையாக கருட வாகனத்தில் கீழவீதி, தெற்குவதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதில் காலை, 6 மணி முதல் கொடிமரத்து மூலையிலும், 6.30 மணிக்கு மேல் கீழவீதியிலும், 7 மணிக்கு மேல் தெற்கு வீதியிலும், 8 மணிக்கு மேல் மேலவீதியிலும், 9.30 மணிக்கு மேல் வடக்கு வீதியிலும் கருடசேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இன்று, ஏழு நவநீத சேவை நடக்கிறது. காலை, 6 மணிக்கு ஸ்வாமிகள் கோவில்களில் இருந்து புறப்பட்டு, 8 மணிக்கு கொடிமரத்து மூலையை வந்தடைவர். அங்கிருந்து, ராஜவீதி வழியாக கோவில்களை சென்றடைவர். 10ம் தேதி விடையாற்றி விழாவுடன் கருடசேவை விழா நிறைவு பெறுகிறது.