சபரிமலை கோவிலில் பாதுகாப்பு :ரோபோவை ஈடுபடுத்துகிறது தேவஸ்தானம்!
திருவனந்தபுரம்: மிகவும் பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க நகைகளை பாதுகாக்கவும், மூட்டை மூட்டையாக குவியும் பணத்தை எண்ணவும், ரோபோ எனப்படும், இயந்திர மனிதனை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டின் சில மாதங்களில், கோடிக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். கோவிலின் பாதுகாப்பு பெட்டகங்களில், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கவும், நன்கொடையாக குவியும் பணத்தை எண்ணவும், 400க்கும் மேற்பட்ட காவலர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுடன், இயந்திர மனிதர்களையும் பயன்படுத்த, தேவஸ்தான நிர்வாகம் முன்வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த, இன்ஜி., நிறுவனம் ஒன்று, 10 - 15 கோடி ரூபாய் செலவில், இயந்திர மனிதர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளது. இதற்கான துவக்க கட்ட ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு, சபரிமலை கோவில் ஊழியர்கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்து உள்ளது. ஊழியர்கள் வேலைநீக்கம், வேலை குறைப்பு போன்றவை இல்லாமல், கோவில் பாதுகாப்புக்கு, தேவஸ்தான் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்போம் என, தேவஸ்தான நிர்வாகி ஒருவர் கூறினார்.