பொங்கலூர்: பொங்கலூர் அடுத்த வலையபாளையத்தில், ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கால பைரவர் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்த அசுரர்களை எதிர்த்து, பைரவர் வேடத்தில் சிவபெருமான் போர் புரிந்ததாக ஐதீகம். மரண பயத்தை போக்கி, பக்தர்களை காக்கும் தெய்வமாக, கால பைரவரை, மக்கள் வழிபடுகின்றனர்.கால பைரவருக்கு தனியாக கோவில் கட்ட விரும்பிய பக்தர்கள், அதற்கான முயற்சியில் இறங்கினர். அதன்படி, பொங்கலூர் வலையபாளையம் அருகே, சுவர்ண அஷ்ட கால பைரவர் கோவில் கட்டும் பணி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இங்கு, நான்கு அடி உயர பீடத்தில், ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ள, 20 அடி உயரமுள்ள கால பைரவர் சிலை, "கிரேன் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. கால பைரவரை சுற்றிலும், நான்கடி உயரம் கொண்ட, 108 பைரவர் சிலைகளும், விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இப்பணி முடிந்ததும், கும்பாபிஷேக விழா நடத்தப்படும்.