உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவில் அன்னதான தோட்டம் வீண்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவில் அன்னதான தோட்டம் வீண்!

திருப்பூர்:இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், கோவில்களில் அமைக்கப்பட்ட அன்னதான தோட்டங்கள், வீணாகியுள்ளன. தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 538 கோவில்களில், அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. "உணவுக்கு தேவையான காய்கறிகளை,அந்தந்த கோவில்களிலேயே விளைவிக்கும் வகையில், அன்னதான தோட்டம் அமைக்க வேண்டும்; கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தயார் செய்து, தக்காளி, கத்தரி, வெண்டை, முருங்கை, வாழை போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும்; இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும்; சொந்த நிலம் இல்லாத கோவில்களில், அருகில் உள்ள மற்ற கோவில் நிலங்களை பெற்று, தோட்டம் அமைக்க வேண்டும், என, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். இத்திட்டத்தால், பக்தர்களுக்கு தரமான காய்கறி மூலம் உணவு தயாராவதோடு, அவற்றுக்கு செலவிடும் பணமும் மிச்சமாகும் என்பதால், 300க்கும் மேற்பட்ட கோவில்களில், பல லட்சம் ரூபாய் செலவில், நிலங்கள் தயார் செய்யப்பட்டு, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

காய்கறி விதை, செடிகள் நடவு செய்யப்பட்டன. தோட்டங்கள் அமைத்து, போட்டோ எடுத்து, செலவு கணக்கு எழுதிய அதிகாரிகள், அதன்பின் அவற்றை கண்டுகொள்ளவில்லை. பல கோவில்களில், தற்போது அன்னதான தோட்டம் பராமரிப்பின்றி, வீணாகி வருகிறது; பக்தர்களுக்கான அன்னதானத்துக்கு, வெளிமார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கப்படுகின்றன.அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்னதான தோட்டம் என்பது சிறப்பான திட்டம். கோவில்களுக்கு என சொந்த நிலங்கள், தண்ணீர் வசதி உள்ளது. தோட்டங்களை பராமரிக்க, ஊழியர்கள், பக்தர்கள் உதவி புரிந்தனர். இயற்கை உரம் பயன்படுத்தி, தரமான காய்கறிகள் விளைவிக்கப்பட்டன.ஆனால், மார்க்கெட்டில் காய்கறி வாங்கினால், கமிஷன் கிடைக்கும். இதுபோன்ற காரணங்களால், அன்னதான தோட்டம் பராமரிப்பு குறித்து, யாரும் கண்டுகொள்ளவில்லை. தோட்டம் அமைத்த, 90 சதவீத கோவில்களில், முட்காடுகளாகவே உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !