அகோபிலமடம் ஜீயர் சுவாமிகளுக்கு வரும் 22ல் சஷ்டியப்த பூர்த்தி விழா!
திருச்சி: அகோபிலமடம், 46வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் சஷ்டியப்த பூர்த்தி விழா வரும், 22ம் தேதி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து மடத்தின் மேலாளர் ராஜகோபால் கூறியதாவது:
அகோபிலமடம், 46வது பட்டம் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஜீயர் எனப்படும் அழகிய
சிங்கர் சுவாமிகளின் பிறந்தநாள், ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது. இந்தாண்டு
சுவாமிகளின், 60வது பிறந்தநாள் என்பதால், சஷ்டியப்த பூர்த்தியை விமரிசையாக கொண்டாட
மடத்து சீடர்கள், சுவாமிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று, ஜீயர் சுவாமிகள்,
சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காக, சென்னை சேலையூரில் இருந்து, கடந்த, மூன்று நாட்களுக்கு
முன், ஸ்ரீரங்கம் வந்தார். அவருக்கு உள்ளூர் சீடர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில், பூரணகும்ப
மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதாரர் சன்னதியில் தங்கியுள்ள அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள்,
தினமும் தன் நித்ய ஆராதன மூர்த்தியான மாலோல நரசிம்மருக்கு சிறப்பு திருவாதாரதனங்கள் நடத்துவதோடு, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி விழா வரும், 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சீடர்கள் மற்றும் பக்தர்கள் வருவர். இதற்காக, மடத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும், ஸ்ரீரங்கம் கீழஉத்தர வீதி அகோபிலமடம் மற்றும் வடக்கு வாசல் தசாவதாரர் சன்னதி ஆகிய இடங்களில், வித்வசதஸ் எனப்படும் வேத விற்பன்னர்கள் சந்திப்பு, வேத, பிரபந்த பாராயணங்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.