பாலமுருகன் கோவில்கும்பாபிஷேகம்!
ப.வேலூர்: அருணகிரிமலை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
ப.வேலூர் அடுத்த, படமுடிபாளையம் அருணகிரிமலை என்ற சிறிய குன்றின் மீது சுயம்பு வடிவமாக பாலமுருகன் ஸ்வாமி அருள்பாலிக்கிறார். இக்கோவில், 1,200 ஆண்டுகளுக்கு முன் பழமையானது என்றும், பரமத்தி கோட்டையில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆட்சி காலத்தில் சிறப்பாக விளங்கியதாகவும் கூறப்படுகிறது.இக்கோவில் புனரமைப்பு பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காலை, 8 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.
மாலை, 6 மணிக்கு, விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து பூஜை, முதல் காலம் நிறைவு, பூர்ணாகுதியும் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 7 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து, 7.20 மணிக்கு, மூலமூர்த்தி கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.