நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பக்தர்களின் வசதிக்காக கூல் கோட்டிங்!
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் சாலையில், பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் "கூல் கோட்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்து வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகிறது. இதை பல்வேறு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு, நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாரையும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, நாமகிரி தாயார் சன்னதிக்கு, 100 மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். பக்தர்கள் செருப்பு அணியாமல் வெறும் கால்களில் வெயில் காலத்தில் நடந்து செல்வது சிரமமாக இருந்தது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதங்களில் சூடு தாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். கோடை காலத்தில் பக்தர்கள் சூடு தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதை அறிந்த நாமக்கல் நகராட்சி நிர்வாகம், இந்த சாலையில் "கூல் கோட்டிங் அடித்தனர். 3, 500 சதுர அடிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் கோட்டிங் இரண்டு லேயரும், அதற்கு மேல் கூல் கோட்டிங் 4 லேயரும் அடித்தனர். தற்போது இந்த கூல் கோட்டிங்கில் எந்த வெயிலின் தாக்கமும் இல்லாமல் பக்தர்கள் நடந்து நடந்து செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பல்வேறு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.