அரசர்களுக்கு இணையாக ஊர் பஞ்சாயத்து செய்ய உரிமை: கல்வெட்டில் தகவல்!
பழநி: பழநி அருகே, சப்ளநாயக்கன்பட்டியில், கி.பி., 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சுந்தர பாண்டியர் காலத்து பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதைந்த நிலையில்... திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு அமைப்பாளர் முத்துமாரி என்பவர் சப்ளநாயக்கன்பட்டிக்குச் சென்றார். அங்கு மண்ணில் புதைந்த நிலையில், புரியாத எழுத்துக்களுடன் ஒரு கல்வெட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன்படி, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில், மாணவர் குழுவினர் அக்கல்வெட்டை ஆய்வு செய்தனர். அதில், கி.பி., 13ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தர பாண்டிய மன்னனின் காலத்தில், அதாவது, கி.பி., 1256ல் பொறிக்கப்பட்டது என தெரியவந் துள்ளது.
நாராயணமூர்த்தி கூறியதாவது: சித்திரமேழி பெரிய நாட்டார் எனும் புகழ் பெற்ற வணிகக் குழு இக்கல்வெட்டை பொறித்துள்ளது. இதில், வணிகக் குழுவின் சின்னமான கலப்பை, உடுக்கை, சூலம் கல்வெட்டின் துவக்கத்தில் உள்ளது. வைகாவூர் நாட்டு பெரிய ஓடை குளத்தின் அருகே இருக்கும், தேச விநாயக பிள்ளையாருக்கு, 18 ராஜ்ஜியத்தில் வாழும் 18 பூமியைச் சேர்ந்த, 18 கூட்டு வணிகக் குழுவினர், பணம் போட்டு இக்கோவிலை கட்டியுள்ளனர்.
வணிக குழுவினர் அதை வைத்து அமுதுப்படி, சாத்துப்படி, திருவிளக்குப்படி போன்ற நிவேதனம் நடத்தவும், இந்த கொடை, சந்திரனும், சூரியனும் உள்ளவரை நடைபெற வேண்டும் எனவும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டை பொறித்த சித்திரமேழி வணிகக் குழுவினர், கி.பி., 11 முதல் கி.பி., 13 வரை புகழ் பெற்று விளங்கினர். எட்டு திசைகளிலும் வணிகம் செய்த குழு, அரசர்களுக்கு இணையாக ஊர் பஞ்சாயத்து செய்யவும், கல்வெட்டு பொறிக்கவும் உரிமை பெற்றிருந்தது. அவர்கள் தான் சப்ளநாயக்கன்பட்டியில் பிள்ளையார் கோவில் கட்டி கல்வெட்டு பொறித்துள்ளனர் என்பது, ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது. இருப்பினும், கல்வெட்டில் கூறியுள்ள பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.