அழகர் கோவில் கும்பாபிஷேகம்: கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்!
அழகர்கோவில் : அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், "கோவிந்தா கோஷம் முழங்க, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் 2007ம் ஆண்டு துவங்கின. கோவில் மற்றும் உபயதாரர்கள் மூலம் கிடைத்த 12 கோடி ரூபாயில் பணிகள் நடந்தன. ராஜகோபுரம், ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமர் சன்னிதி கோபுர சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது. மூலவர் பரமசாமி சன்னிதி சோமச்சந்திர தங்க விமானம், 800 ஆண்டுகளுக்குப் பின், முழுவதும் பிரித்து சீர் செய்யப்பட்டது. 900 சதுர அடி கொண்ட இவ்விமானம், ஐந்து கோடி ரூபாயில் 25 கிலோ தங்கத்தால் முலாம் பூசப்பட்டது. பிரகாரத் தூண்கள், மேற்கூரையில் இருந்த வெடிப்புகள் சரிசெய்யப்பட்டன.
கும்பாபிஷேகம்: கும்பாபிஷேக யாக சாலை பூஜை, ஜூலை 6 மாலை துவக்கியது. தொடர்ந்து எட்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8.30 மணிக்கு, யாக சாலை பூஜை பூர்த்தி அடைந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய வெள்ளிக் குடங்களை, பட்டாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் சென்றனர். அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் பச்சைக் கொடி காண்பித்தவுடன், 9.12 மணிக்கு பட்டர்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள், "கோவிந்தா என கோஷம் முழங்கி தரிசித்தனர். மூலவர் மற்றும் சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக சாத்தப்பட்டிருந்த மூலவர் சன்னிதி நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலையில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஸ்வநாதன், கலெக்டர் சகாயம், அறநிலையத் துறை கமிஷனர் முத்தையா கலைவாணன், செயலர் ராமநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மலை மீது பக்தர்கள்
* இரணியன் வாயில், கோட்டை வாயில், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பெரிய எல்.சி.டி., "டிவிக்கள் மூலம் கும்பாபிஷேகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றிய போது, "ஸ்பிரேயர்கள் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
* நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலில் நடை சாத்தப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமான பக்தர்கள் மலையில் நின்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.