அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும், சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, மேளதாளம் முழங்க விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஸ்வாமி சன்னதி முன் உள்ள தங்ககொடி மரம் அருகே, அலங்கார ரூபத்தில் ஸ்வாமிகள் எழுந்தருளினர். பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, காலை, 6 மணி அளவில், ஆனி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு, "அரோகரா... அரோகரா... என, பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். இவ்விழா, தொடர்ந்து, 10 நாட்களுக்கு நடக்கும். இதில், தினமும் காலை, இரவு நேரங்களில் விநாயகர், சந்திரசேகரர் மேளதாளம் முழங்க, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழா ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.