கோவிலுக்கு உள்ளே பரிகாரம் செய்ய...எதிர்ப்பு: பக்தர்கள் அச்சம்!
ஈரோடு: கொடுமுடி கோவிலுக்குள் பரிகாரங்கள் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், மூவரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு, மகுடேஸ்வரர், பெருமாள், சக்தி ஆகிய மூன்று ஸ்வாமிகளும் உள்ளனர். பழம் சிறப்பு பெற்ற கோவில் என்பதால், புராதன நகரமாக கொடுமுடியை அரசு அறிவித்து, ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியது. இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலம் என்பதால், பல மாநிலத்தவர் இங்கு வருவர். கோவிலுக்குள் பரிகாரம் செய்ய, 200 ரூபாய் வரை, கோவில் நிர்வாகம் கட்டணமாக வசூலிக்கிறது.இதுபற்றி, பக்தர்கள், பொதுமக்கள் கூறியதாவது: ஆகம விதிப்படி கோவிலுக்குள் பரிகாரம் செய்யக் கூடாது. பவானியில், இதற்காக மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பரிகாரம் செய்த பின், கொடுமுடி கோவிலில் பக்தர்கள் நேரடியாகவே சன்னிதானம் செல்கின்றனர். இதனால், ஸ்வாமியின் "சானித்தியம் (சக்தி) குறைந்துவிடும். கோவிலின் முன் கோசாலை அமைந்து இருந்த இடத்தில் தான், பரிகாரங்கள் நடக்கிறது. அவ்வாறு செய்ய கூடாது. பரிகார பூஜை செய்வதற்கு சில புரோக்கர்கள் உள்ளனர். பக்தர்களுக்கு தகுந்தவாறு, 3,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.இதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தை. வெளிமாநில பக்தர்கள், இதை புதிராக பார்த்து, கோவிலுக்குள் நடக்கும் பரிகார பூஜைகளால் அச்சமுற்று, விரைந்து வெளியேறி விடுகின்றனர்.
இதுபற்றி, கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், நடவடிக்கை இல்லை.பரிகார பூஜைகளை கோவிலுக்கு வெளியே, ஆற்றின் கரையோரம் வைத்து கொள்ள வேண்டும். மாறாக பக்தர்களை அச்சுறுத்தும் வகையில், பரிகார பூஜைகள் நடத்துவது தவறானது, என்றனர். பா.ஜ.,தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் (பிரச்சார அணி) முருகேஷ் கூறும் போது, கோவிலுக்குள் பரிகாரம் செய்ய கூடாது. சுவாமிக்கு சக்தி குறைந்து விடும். எனவே பரிகாரத்தை கோவிலுக்கு வெளியே வைத்து கொள்ள வேண்டும், என்று, கடந்த, 10 ஆண்டாக போராடி வருகிறேன். மாவட்ட அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளேன்.இதனால் பக்தர்கள் வருகை குறைய வாய்ப்பு உள்ளது. கோவிலுக்குள் பரிகார பூஜை நடத்துவது குறித்து, பதில் கூற அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, பரிகாரங்களை கோவிலுக்குள் செய்வதை தடை செய்ய வேண்டும், என்றார். கோவில் நிர்வாகிகள் கூறும் போது, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள், கோவிலுக்குள் பரிகாரம் செய்வது வழக்கம். இது பரிகார ஸ்தலம் என்ற சிறப்புக்கு உரியது. முன்னர், 10 ரூபாயாக இருந்த பரிகார கட்டணம் தற்போது, 200 ரூபாயாக உள்ளது. பரிகாரம் குறித்து, பலமுறை துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.