குலம் காக்கும் கோமான்!
ADDED :3756 days ago
குலங்காக்கும் கோமானே
கோட்டக் கருப்ப சாமியய்யா
தென்புலத்து நாயகனே
தேடிவாரோம் உன்னடியை
எனையாளும் மன்னவனே
எங்கள் குலம் தழைத்தோங்க
என்னாளும் உடனிருந்து
ஆசிபல தாருமய்யா
பொலிவான நின்முகத்தின்
பெருமீசை கண்டதுமே
பொல்லாத வஞ்சனைகள்
பொறிபோல பறக்குமய்யா
கரியபெரிய விழியிரண்டை
கண்டவுடன் நெஞ்சமெல்லாம்
கரை காணா கடல்போலே
பூரிப்பால் நிறையுதய்யா
ஆங்கார சொரூபனாய்
அரிவாளை ஏந்திநிற்கும்
அழகுதனை கண்டிடவே
ஆயிரம்கண் வேண்டுமய்யா
ஓங்கார ஒயிலுருவாய்
உயிர்காக்கும் தூயவனே
என்னாளும் எமைக்காத்து
இரட்சிக்க வேண்டுமய்யா
செய்கின்ற பூசைகளை
செம்மையுடன் ஏற்றிடுவான்
செழிப்பான வாழ்வுதனை
உவப்போடு அருளிடுவான்
கறுப்பசாமி பேரைநிதம்
கருத்தோடு போற்றிடவே
கலகங்கள் விலகிடுமே
கவலையெல்லாம் கரைந்திடுமே.