வெள்ளாத்தூரம்மன் கோவிலில்27ல் ஆடி பொங்கல் திருவிழா
ஆர்.கே.பேட்டை:வெள்ளாத்துாரம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் ஆடி பொங்கல் விழா, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துார் கிராமத்தில், வெள்ளாத்துாரம்மன் கோவில் உள்ளது. ஆடி மற்றும் தை மாதங்களில், இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, பக்தர்கள் வந்து, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில், பால்குட ஊர்வலம், அபிஷேகம் மற்றும் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதில், ஆர்.கே.பேட்டை, வங்கனுார், சொரக்காய்பேட்டை மற்றும் ஆந்திர மாநில நாராயணவனம், நகரி, புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 27ம் தேதி காலை, வெள்ளாத்துார் கூட்டு சாலையில் இருந்து, பால்குட ஊர்வலம் புறப்படுகிறது. பகல், 12:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பெரியாண்டவர் பூஜையுடன், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.