உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சமலையில் கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு

பச்சமலையில் கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு

திருவாரூர்: திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பச்சமலை பகுதியில், 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய, புதிய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தொல்லியல் வல்லுபநர் குடவாயில் சுந்தரவேலு கூறியிருப்பதாவது;  திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய பச்சமலை பகுதியில் கற்கால வாழ்விடங்கள் குறித்து, கடந்த, இரண்டு மாதமாக சிறப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் பச்சமலையில் உள்ள ஆத்தி, தென்புற,வெண், கோம்பை ஆகிய நாடுகளில் உள்ள, 64 கிராமங்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை, என்பது தெரியவந்துள்ளது. இதில், இரண்டு இடங்களில் மட்டும் அரிய வட்டத்துளைக்கல் மற்றும் ஒரு கிராமத்தில், இரு புறமும் வெட்டுவாயும் நடுவில் உருளை வடிவிலும் உள்ள அபூர்வ கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பச்சமலை இந்திய அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த, ஒரு தொல்லியல் கற்கால மண்டலம், என்பது தெரிய வந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள வட்ட துளைக்கல் கருவி, தொங்கும் கோழி கூண்டை ஆடாது நிலை நிறுத்தும் கல்லாக, மலைவாழ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், இரு புறமும் வெட்டு வாய் கொண்ட கருவி ஒன்றும், மலைவாழ் மக்களிடத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் கருவிகள் அனைத்தும், நன்கு தேய்த்து மிருதுவாக்கப்பட்ட மேற்பரப்பை கொண்டதாக உள்ளது. இக்கருவிகள், மலைவாழ் பழங்குடி மக்களிடம், 5,000 ஆண்டுகளுக்கு முன், காட்டுப் பொருள்களுக்கு பண்டமாற்று வியாபாரத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பீஹார் மாநிலத்தில் மவுரியர்களின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் (பாட்னா) 75 ஆண்டுகளுக்கு முன், மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதை போல், பச்சமலையில் உள்ள செங்கத்தூரிலும் இருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு, தொல்லியல் வல்லுநர் சுந்தரவேலு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !