திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ரூ.1.5 கோடிக்கு திருப்பணி
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்து, ஐந்து மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது; செயல் அலுவலர் சிவராமசூரியன் வரவேற்றார். திருப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள "ஆதீஸ்வர் டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியம், செய லாளர் துரைசாமி, பொருளாளர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த் பேசுகையில், ""ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற அடிப்படையில், கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆன்மிகம் மற்றும் ஆகம விதிப்படியும், அறநிலையத்துறை சட்டப்படியும் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார். பட்டி விநாயகர் கோவில் பணி, ராஜகோபுரம் வர்ணம் பூசுதல், 22 தூண்கள் அழகுபடுத்துதல், மூலவர், அம்பாள், சுப்ரமணியம், சனீஸ்வரர், நடராஜர் சன்னதி கோபுரங்கள் வர்ணம் பூசுதல், கதவு, நிலவுகளுக்கு பித்தளை தகடு பதித்தல், உள்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் கற்கள் பதித்தல், சுவாமிகளுக்கு தங்கம், நவரத்தினம், பவளம் ஆகியவற்றில் அங்கி சாத்துதல் உள்ளிட்ட, 58 திருப்பணிகள் மேற்கொள்வதற்கான, 1.5 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு பட்டியல், உபயதாரர்களுக்கு வழங்கப்பட்டது. உபதாரர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பணியை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். ஆதிஸ்வர் டிரஸ்ட் நிர்வாகிகள் கூறுகையில், "திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்; ஒவ்வொரு ஞாயிறும், திருப்பணிக்குழு கூட்டம் நடத்தப்படும்; பணியை முடித்து, ஐந்து மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்றனர்.