மாமல்லபுரம் கடற்கரை கோவில் வரைபடம் தயாரிக்கும் பணி!
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் தற்போதைய உருவ அமைப்பை அளவிட்டு, வரைபடம் தயாரிக்கும் பணியை தொல்லியல் துறை துவக்கி உள்ளது.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், வெட்டுப் பாறைகளால் அமைக்கப்பட்ட கற்கோவில், ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரக் குழுவால், சர்வதேச பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இரட்டை விமானங்களுடன் அமைந்து உள்ள இக்கோவிலை, மத்திய அரசு, ஆதர்ஷ் பாரம்பரிய சின்னமாக அறிவித்து, கோவில் வளாக சுற்றுச்சூழல்; வரலாறு குறித்த கருத்தியல் மற்றும் காட்சியியல் கூடம்; அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தொல்லியல் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, கோவில் மற்றும் வளாக பகுதியின் நில அமைப்பை அளவிடுதல், கோவிலை அளவிட்டு வரைபடம் தயாரித்தல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.இதற்காக, இங்கு முகாமிட்டுள்ள தொல்லியல் துறையினர், கோவில் வளாக அமைப்பு; நிலமட்டத்திலிருந்து, கோவிலின் உயரம்; அதன் மொத்த சுற்றளவு; சிறிய, பெரிய விமானங்களின் உயரம்; சிற்பங்கள்; பிற வடிவமைப்புகள்; கோவிலைச் சுற்றியுள்ள வளாக பகுதி ஆகியவற்றை அளவிட்டு, புதிய வரைபடம் தயாரிக்கின்றனர்.