ஆடிப்பெருக்கு காலத்தில் வெயில்!
பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தீவிர பருவமழை பெய்ய வேண்டிய ஆடிப்பெருக்கு காலத்தில், கடும் வெயில் அடிப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இன்று ஆடிப் பெருக்கு பண்டிகையை கொண்டாடும் நிலையில், பொள்ளாச்சி பகுதியில் வழக்கமாக பெய்யும் பருவமழை நின்று வெயில் காய்ந்து வருகிறது. வழக்கமாக ஆடிப்பெருக்கு பண்டிகை சமயம், இப்பகுதியில் தீவிரமான தென்மேற்கு பருவமழை பெய்யும். பிறகு ஆடி அமாவாசையை ஒட்டி, மழை குறைந்து நிற்கும். பல நூறு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பருவநிலையை கருத்தில் கொண்டே, ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஒடும் காலத்தில், ஆடிப் பெருக்கு பண்டிகையை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்தனர்.ஆனால் தற்போது இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டு, பருவ நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பருவமழையும் முன்பின்னாக பெய்தும், சமயத்தில் பொய்த்தும் விடுகிறது. அதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு கோடை காலமான அக்னி நட்சத்திர காலத்தில், தொடர்ந்து பலத்த மழை பெய்து மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. தற்போது பருவமழை காலத்தில் வெயில் காய்ந்து அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தாண்டு பருவமழை குறைந்து போனதால், விவசாயத்திற்கு பாசனப்பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.-நமது நிருபர்-