மந்திரக் கருப்பர் வருகைப் பதிகம்!
விநாயகர் வணக்கம்
வந்தித்துப் போற்றி வணங்கித் தொழுவோர்க்கு
முந்தி அருள்கொடுக்க முகமலரும் கணபதியே!
மந்தார வனம்காக்கும் மந்திக் கருப்பரை யாம்
செந்தமிழால் வரவேற்கத் திருவருளைத் தாருமய்யா!
மந்திக் கருப்பா! மாகாள தேவா!
பைந்தமிழால் மாலைகட்டிப் பதமலரில் சூட்டுகிறோம்
சிந்தனையைத் தெளிவாக்கி செய்கையினை அறமாக்க
வந்தனைகள் கூறுகிறோம் வருவாய் இதுசமயம்.
மழையறியாச் சீமையிலே மலைபோல் வீற்றிருந்து
பிழைபொறுத்துக் காப்பாற்றும் பெரிய கருப்பண்ணனே!
தலைமேலே பூச்சுமந்து தளிரடியிற் சூட்டுகிறோம்
அழையாமல் ஓடிவந்தே அருள்வாய் இதுசமயம்.
நாயகியாள் உடனாய நயினாரின் சந்நிதியில்
வாயில் திசைநோக்கி வலப்புறத்து மேடையிலே
தூயவுருக் காட்டாமல் சுடர்வாளின் வடிவான
தாயகமே! கருப்பண்ணனே! தாவிவர வேணுமய்யா!
பாதமலர்த் தாமரையும் பக்கத்தில் வாளிரண்டும்
காதங்கள் சென்றடையும் கந்தவடி நறுமணமும்
ஏதமிலாத் திருமுடியில் எலுமிச்சைப் பழக்குவையும்
ஆதரவாய்க் காட்டி அருகுவர வேணுமய்யா!
கோட்டூர் கருப்பண்ணனே! கொண்டு வந்து பன்னீரை
ஆட்சி மகிழுகையில் ஆவி உருகுதய்யா
பாட்டாலே தெண்டனிட்டுப் பணிவாக வணங்குகிறோம்
கேட்டவரம் தந்தருளக் கிட்டவர வேண்டுமய்யா!
இந்திராணி காவலனே! எங்கள் குடிகாக்க
மந்தார வனம்நோக்கி வந்திருக்கும் நாயகமே!
கந்தவடி நறுமணத்தைக் காதலிக்கும் கருப்பண்ணனே!
வந்தபயன் ஈடேற வருவாய் இதுசமயம்.
எலுமிச்சைக் கனிகளினை ஏற்றருளும் பெருந்தேவே!
எலுமிச்சை தனையடக்கி எமைக்காக்க வேண்டுமெனக்
குழுமிச்செய் பணிகளெலாம் கோபுரத்தில் விளக்காக
எலுமிச்சை போலுருண்டே எழுவாய் இதுசமயம்.
நாட்டில் மழைபொழிய நற்பணிகள் தொடர்ந்துவர
வீட்டில் அறம்வளர விளைவயல்கள் பொன்கொழிக்க
கோட்டையிலே கொடிபறக்கக் கோட்டூரின் புகழ்வளரச்
சாட்டை சொடுக்கிச் சதிராட வேண்டுமய்யா!
கன்னியர்கள் மாலைபெறக் காளையர்கள் வேலைபெறக்
கண்ணியமே வெற்றிபெறக் கடவுள் பணிதொடரப்
புண்ணியமே வயல்களிலே புதுப்பயிராய் விளைந்துவரக்
கண்ணான கருப்பண்ணனே! கடுகிவர வேண்டுமய்யா!
நல்லவர்க்கும் அல்லவர்க்கும் நடுவான நாயகமே!
வல்லவர்க்கும் எளியவர்க்கும் வாழ்வளிக்கும் தாயகமே!
எல்லாரும் வாழ இதயமலர் தூவுகிறோம்
வல்லவனே கருப்பையா! வந்தருள வேண்டுமய்யா!
எதுசமயம் என்றே எவரும் அறியாமல்
மதுவெறிதான் தலைக்கேறி மதம்பிடிக்கும் நேரத்தில்
பொதுவாக வீற்றிருந்து புத்தியிலே சூடாற்றி
எதுசமயம் எனக்காட்ட எழுவாய் இதுசமயம்.
நாயகியாள் சௌந்தரமும் நாயகரைப் பார்த்திருப்பாள்
நாயகமாம் நயினாரும் நம்பிள்ளை எனப்பொறுப்பார்
தீயவரைச் சாட்டையினால் திருத்துவதும் உன்பொறுப்பே
தூயவனே! ஆதலினால் தோன்றிடுவாய் இதுசமயம்.
பள்ளியிலே பிள்ளைகளைப் பாடத்தில் செலுத்திடுவாய்
கள்ளியிலும் முல்லைமணம் கமகமக்கச் செய்திடுவாய்
அள்ளியிடும் பெருமனத்தை அனைவர்க்கும் வழங்கிடுவாய்
துள்ளிவரும் பரியேறித் தோன்றிடுவாய் இதுசமயம்.
பாருக்கு நலம்கொடுக்கும் பரந்தாமன் திருவடிவே!
சீருக்குச் சீர்மணக்கும் செந்தமிழின் காதலனே!
பாருக்கே வாழ்வளிக்கப் பணிவாக வேண்டுகிறோம்
காக்கும் கைகொடுத்துக் காத்தருள வேண்டுமய்யா!
மங்கலங்கள் பொங்கிவர மனைகாக்கும் கருப்பண்ணனே!
வங்காளக் கடல்போல வளம்கொடுக்கும் தாயகமே!
சிங்காரத் தமிழாலே திருவடியைப் போற்றுகிறோம்.
இங்கின்றே அருள்பொழிய எழுவாய் இதுசமயம்.
பாகப்பெண் சௌந்தரமாம் பரமசிவன் நயினாராம்
தாகத்தைத் தீர்த்தருளும் தளபதியே! கருப்பண்ணனே!
ஏகப்பன் உன்பிள்ளை இயற்றுகிற பணியேற்க
வேகப்பண் பாட்டேற்று விரைந்திடுவாய் இதுசமயம்