உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பையா அருள் வேட்டல்!

கருப்பையா அருள் வேட்டல்!

திருக்களக் குடியார்கள் திருவளரும் குடியாக
உருக்கிளறும் அரிவாளின் உருவத்தில் உனைநட்டுக்
கருவளரும் பிள்ளைகளும் கைகூப்பித் தெண்டனிட்டோம்
மருவளரும் மாலையுடன் வருவாய் இதுசமயம்

வயிரவன் பட்டிவிட்டு மகிபாலன் பட்டிக்கு
ஒயிலாக நடைநடந்து ஒய்யார மீசையுடன்
பயிராகக்குலம் வளர்க்கப் பணிவாக வேண்டுகிறோம்
வயிறாரும் படைப்பேற்க வருவாய் இதுசமயம்.

மூன்றுபலி கொள்ளுகிற முப்பலிக் கருப்பையா!
ஈன்றுவளர் தாய்போல எங்கள்குலம் காப்பவனே!
ஊன்றியுள்ள அரிவாளை உன்னழகுத் தோளேந்தி
ஈண்டுவர வேண்டுகிறோம் எழுவாய் இதுசயம்.

பாச்சோறு படைத்துவைத்தோம் பருப்பு மசித்துவைத்தோம்
பூச்சூட்டி மாலையிட்டோம் புகையேந்தித் தெண்டனிட்டோம்
மாச்சூடு தவறாமல் பணியாரப் படையலிட்டோம்
வீச்சரிவாள் கருப்பையா! விரைவாய் இதுசமயம்.

தேங்காய் உடைத்துவைத்தோம் திருநீறும் எடுத்துவைத்தோம்
ஈங்கெழுந்து வருகவென எலுமிச்சைக் கனியும் வைத்தோம்
ஏங்கிக் கதறுகிறோம் இங்குவர வேண்டுகிறோம்.
ஓங்காரக் கருப்பையா உள்வருவாய் இதுசமயம்.

நீலமுகில் மேனியனே! நெடுமீசைக் கருப்பண்ணனே!
ஓலமிடும் பிள்ளைக்குரல் உன்செவிக்கு கேட்கலியோ!
காலமெலாம் காப்பாற்றும் கருப்பையா! அழைத்தவுடன்
வேளை தவறாமல் விளையாட வேண்டுமய்யா!

ஒய்யார மீசைவளர் ஓங்காரக் கருப்பண்ணனே!
மெய்யான அடியவர்கள் மிகப்பணிந்து தெண்டனிட்டோம்
கையரிவாள் மின்னலிடக் காற்சலங்கை தாளமிட
அய்யா! குலமணியே அருகில்வர வேண்டுமய்யா!

வருவாய் என வழைத்தால் வாரா திருப்பதுவோ?
தருவாய் வரமென்றால் தாய்மறுக்கும் பழக்கமுண்டோ?
குருவாய் வழிநடத்திக் குலம்காக்கும் கருப்பண்ணனே
வருவாய் எனவழைத்தோம் வந்தருள வேண்டுமய்யா!

என்ன கருப்பையா? எழுந்துவரத் தாமதமேன்?
சின்னவர்கள் பிழை செய்தால் மன்னவன் நீ வெறுப்பதுவோ?
அன்னைமனம் கொண்டவனே! ஆதரிக்கும் கருப்பண்ணனே!
வண்ணமலர் மாலையுடன் வருவாய் இது சமயம்.

தராதரம் பார்ப்பாயோ? தாங்கும் பொறுப்பிலையோ?
வராமல் விடுவோமா? வரவழைக்கத் தெரியாதா
சிறாவயலைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துன்னைக் கூவுகிறோம்
கறாராய் நடக்காமல் காப்பாற்ற வேண்டுமய்யா

அகிலத்தைக் காப்பவனே! அரிவாளைக் கொண்டவனே!
மகிழ மலர்போல் மணக்கின்ற மேனியனே!
மகிபாலன் பட்டியினர் மனமார வேண்டுகிறோம்.
துகிலெடுத்துத் தோள்சார்த்தித் துடித்துவர வேண்டுமய்யா!

அதிமதுரப் பணியாரம் அடுக்கிப் படையலிட்டோம்
புதுவேட்டி சாத்துகிறோம் பூப்போட்டு கெஞ்சுகிறோம்
அதிகாரக் குரலெடுத்து ஆதாய வரவாகப்
புதுப்பட்டி யாரழைப்பைப் போற்றிவர வேண்டுமய்யா!

தருமதுரை ஆனவனே! தாயானகருப்பண்ணனே!
மருவளரும் பூத்தூவி மண்டியிட்டுத் தெண்டனிட்டோம்
சிறுகூடற் பட்டியினர் சேர்ந்திருந்து வேண்டுகிறோம்.
உருவளரும் வாளேந்தி ஓடிவர வேண்டுமய்யா!

மக்கள் நலம்காக்கும் மன்னவனே! கருப்பையா!
பக்காவில் அரிசியிட்டுப் பாற்சோறு படைத்துன்னைக்
கெக்கலிச் சிரிப்போடு கிட்டவர வேண்டுமெனத்
தெக்கூரார் வேண்டுகிறோம் தெரிசனத்தைத் தாருமய்யா!

ஊரை அழைத்துவைத்தோம் உன்னருளை வேண்டுகிறோம்
சீரை அளந்துவைத்தோம் செந்தமிழால் வணங்குகிறோம்
நீரை அருகுவைத்தோம் நெருப்பில் புகைவளர்த்தோம்
காரைக் குடியார்கள் கதறுகிறோம் வாருமய்யா!

பாடாத பாட்டெல்லாம் பாடி அழைத்தாலும்
ஆடா திருப்பதுவோ அருளும் வறண்டதுவோ?
காடெல்லாம் கமகமக்கக் கண்டவராயன்பட்டியினர்
வாடா என அழைத்தோம் வந்தருள வேண்டுமய்யா

மங்கலங்கள் பொங்க மனைவளர்க்கும் கருப்பையா!
சிங்கார வடிவேலன் செந்தமிழால் வரவழைத்தோம்
குங்குமத்தை நெற்றியிட்டுக் குதிரைச் சேவகனாய்
எங்கே அழைத்தாலும் எதிரில்வர வேண்டுமய்யா

பத்தெட்டுப் பாடலினால் பணிவாக உனை அழைத்தோம்
முத்தெடுக்கும் பாவனையில் மூச்சடக்கி ஓலமிட்டோம்
மொத்தத்தில் கூடி முற்றத்தில் வரவழைத்தோம்
பக்திப் பயிர்வளரப் பறந்துவர வேண்டுமய்யா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !