பவனி வரும் கருப்பண்ணன்!
ஷேமங் குதிரை இரண்டு முன்னே நிற்க
திவ்யமுடன் பவனி வரும் கருப்பண்ணசாமி
ஷேமநலம் தந்தருள வேண்டு மென்றே
சேர்ந்தே வணங்குகிறோம் சிறக்க செய்வாயே
செந்தமிழில் சொல்லெடுத்து கவி தொடுத்தோம்
சிந்தைக்குள்ளே உன்நாமம் சொல்லத் துடித்தோம்
பாருக்குள்ளே பல பணிகள் செய்திடவே
பாதம் வணங்குகிறோம் பார்த் தருள்வாயே
அழகான மீசையுடன் தலைப்பாகையும்
அரிவாள் அடிபிரம்பு கையிற் கொண்டு
வருகின்ற பக்தர்க்கு அருளும் தந்து - எம்மை
வாழவைத்து காக்கும் எங்கள் கருப்பண்ணனே
முல்லைப்பூ பூக்கின்ற சிரிப்புக் குள்ளே
முத்தான திருமுகமும் காட்சி தரும்
ஒயிலாக நீநிற்கும் அழகைக்கண்டு
ஒய்யார பாடல்கள் உனக்குச் சொன்னோம்
கோழியுடன் கடாவையும் பூசை யிட்டு
கொண்டாடும் எங்கள் குலம் காத்தருள்வாயே
நாளும் உந்தன் திருநாமம் போற்றிடவே
நலம் யாவும் தந்தருளும் கருப்பண்ணனே
கிங்கிணி சலங்கைக் சத்தம் கேட்டிடவே - உள்ளம்
கிடுகிடுக்க இங்கே நீயும் ஓடிவருவாய்
தளிர்நடைப் பயின்றபடி நாடி வந்தோம்
தரிசனம் நீ தந்தருள்வாய் கருப்பண்ணனே.