பசுபதீஸ்வரன் கோவிலில் தெய்வத் திருமண உற்சவம் துவக்கம்
ADDED :3730 days ago
கரூர் : கரூர், மகா அபிஷேக குழு சார்பில், 17ம் ஆண்டு தெய்வத்திருமண விழா பசுபதீஸ்வரர் கோவிலில், ஆகஸ்ட், 16ம் தேதி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட், 15ம் தேதி மாலை, 4 மணிக்கு கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு பிரம்மாண்ட மாலை சாத்துதல், கரூர் பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் அழைக்க புறப்படுத்தல் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்தட்டு அழைத்தல் சிறப்பு உபசரணைகள், மகா தீபாராதனை நடக்கிறது.ஆகஸ்ட், 16ம் தேதி காலை, 10.30 மணிக்கு தெய்வத்திருமணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி, நேற்று முகூர்த்தகால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.