கோட்டைக் கருப்பர் புகழ்!
திருவளரும் திருப்புத்தூர்த் தளியின் முன்னற்
திகழ்ஒளிசேர் கோட்டைக்கருப்பர் கோயில்
பெருமையுடன் விளங்குமந்தக் கோயிலுக்குப்
பெட்புடைய அடியவர்கள் ஒருங்கு கூடி
அருமையுடன் குடமுழுக்கு விழாவமைத்தார்
ஆர்வமுடன் கொண்டாடி வணங்குகின்றார்!
திருவளர எல்லோர்க்கும் நலம் வளர்க்கும்
திகழ்கோட்டைக் கருப்பரின் தாள் சிந்திப்போமே!
திருப்புத்தூர் மேல்வாயில் ஆஞ்சநேயர்
திசைவடக்கில் அங்காள பரமேஸ்வரி
பெருமைதரு தென்திசையில் பூமாரி அம்மன்
பெட்புடைய தெய்வங்கள் காத்திருக்க
அருமைமிகும் நகரத்தார் போற்றுகின்ற
அழகிய கோட்டைக் கருப்பர் கீழ்த்திசைக்காய்
ஒருமையுடன் காக்கின்றார் ஊர்நடுவேநல்
வயிரவரும் விளங்குமிந்தச் சிறப்பு காணீர்!
பழம்புகழ்சேர் திருக்கோயில் கருப்பருக்குப்
பண்புடைய குடிமக்கள் சேர்ந்து செய்யும்
விழாநாளில் அனைவரையும் காக்க என்றே
வேண்டியவர் திருப்பாதம் பணிவோம் வாரீர்!
அழகுமிகும் கோயிலின்முன் கூடி நின்று
அடிமைசெய்து வாழ்த்திசைத்து வணங்கி நிற்போம்!
செழுமைமிகு நலவாழ்வு செல்வம்யாவும்
சிறக்கச்செய் கருப்பர்புகழ் வாழ்க வாழ்க! தமிழண்ணல்.