கோட்டைக் கருப்பர் பாமாலை
தேவகோட்டை குழிபிறை சிவல்பட்டி விராமதி
சிறுகூடல் தெம்மா பட்டு,
சேர்நாட் டரசன்நகர் திருப்புத்தூர் சதுர்வேதம்
சிறுநகரம் அம்மா பட்டி.
ஆவலுள்ள பக்தர்கள் ஆண்டாண்டு காலமாய்
அண்டிவந் தேவ ணங்க
ஆற்றலைக் கொடுத்திடும் கருப்பண்ண சாமியினை
ஆதார மாக எண்ணி
சேவலுடன் ஆடோடு கோழியும் கொடுத்திங்கே
சிறுமுட்டை கூட வைப்பார்!
சின்னா என்று நீ அழைத்ததும் கத்துகிற
சிலிர்க்கின்ற காட்சி கண்டோம்!
பூவுலகில் மீசையும் சுக்குமாந் தடி அரிவாள்
பூசிக்க வைத்த கருப்பா!
புகழ்மிக்க திருப்புத்தூர் கோட்டையினை ஆள்பவன் நீ
பொருள் கொடுத்து காக்க வா! வா!
பள்ளயம் போட்டே படைத்திடுவார் உன்றனுக்கு
பக்தர்கள் ஆண்டு தோறும்!
பக்கத்தில் மணியுண்டு சங்கிலிக் கருப்பருடன்
பறக்கின்ற குதிரை யுண்டு!
சுள்ளோடு கத்திரிக்காய் கருவாடு சேர்த்துமே
சுவையாக உனக்க ளிப்பார்!
சுகமான வாழ்வுதர கலியுகத்தில் நீ வந்து
தொழுவோர்க்கு அருளுவாயே!
எல்லோரும் உனக்கின்று வேட்டைத் தலைப்பா வைத்து
எதிர்கொண்டு பார்த்து மகிழ்வார்!
இனியதொரு தலைப்பாவாய் ராஜதலைப் பாவைத்து
இயல்பாக வணங்கி நிற்பார்!
வல்லவனே! திருப்புத்தூர் கோட்டைக் கருப்பண்ண
வள்ளலே உனைத்துதித் தோம்!
வரம்தந்து நலம்தந்து வாழ்க்கைக்குத் துணையாகி
வழிகாட்ட ஓடி வருக!
ஆதாமும் ஏவாளும் முன்னாளில் இனத்தினை
அகிலத்தில் பெருக்கி வைத்தார்!
அதன்பிறகு உண்டான அவனியில் மக்களோ
ஆதார மாகி நின்றார்!
போதுமெனச் சொல்லுகின்ற அளவிற்கு இன்றுதினம்
புற்றீசல் போல் வந்தார்
பொருளுக்கும் பொன்னுக்கும் தட்டுப்பாடாகிய தால்
புரியாமல் மயங்கு கின்றார்!
சாதா ரணக்குடியைச் சார்ந்தவரும் இன்றுதினம்
சந்தோஷம் வேண்டு மென்றால்
சாமியினை வழிபடவே திருப்புத்தூர் திருநகரம்
தானாக ஓடி வருவார்!
கோதா வள நதியாய் கும்பிட்ட பக்தரெலாம்
கொடிகட்டிப் பறப்ப தற்கே.
கோட்டைக் கருப்பண்ண சாமியாய் வந்தவனே
கூப்பிட்டேன் காக்க வா! வா!