உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

திருவாடானை ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

திருவாடானை: திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது. இரவில் சிநேகவல்லி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் செயல் அலுவலர் சந்திரசேகர், 22 கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,15, திருக்கல்யாணம் ஆக.,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நயினார்கோவில் சவுந்தர்யநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நேற்று காலை 7.35 மணிக்கு அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றினர். இதையொட்டி தினமும் காலை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை, காமதேனு ஆகிய வாகனங்களில் வீதியுலா வருவார். ஆக., 15 ல் காலை 10.30 மணிக்கு தேரோட்டமும், ஆக., 18 ல் காலை 10.30 முதல் 11.15 மணிக்குள் நாகநாதசுவாமி,சவுந்தர்யநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும்.இரவு மின்சார தீப அலங்கார ரதத்தில் சுவாமியும், தென்னங்குருத்து சப்பரத்தில் அம்மன் வீதியுலா வருவர். ஆக., 21 ல் இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஆக., 27 ல் உற்சவ சாந்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !