உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப திருவிழா!

திருத்தணி முருகன் கோவிலில் தெப்ப திருவிழா!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த, இரண்டாம் நாள் தெப்ப திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம், ஆடிக் கிருத்திகை மற்றும் முதல்நாள் தெப்பத் திருவிழா நடந்தது.இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். இரவு, 7:30 மணிக்கு, சரவணப் பொய்கையில் நடந்த முதல்நாள் தெப்பத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ பெருமானை தரிசித்தனர்.இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான், மலைப் படிகள் வழியாக மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கையில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்ப திருவிழா நடந்தது. நேற்று நடந்த இரண்டாம் நாள் தெப்ப விழாவில், உற்சவர் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று மாலை, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !