உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவ்வை அம்மனுக்கு ஆடிசெவ்வாய் கொழுக்கட்டை வழிபாடு!

அவ்வை அம்மனுக்கு ஆடிசெவ்வாய் கொழுக்கட்டை வழிபாடு!

நாகர்கோவில்: ஆடி கடைசி செவ்வாய் கிழமை நாளில், தமிழ் புலவர் ஓவ்வையாருக்கு கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் உள்ள கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தினர். மொழிப்புலமையால் தமிழுக்கு பெருமை சேர்த்த பெண் புலவர் அவ்வையார். இவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் கோயில் அமைந்துள்ளது. தாழக்குடி செண்பகராமன்புதூர் ரோட்டில் கனகமூலம் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்த அவ்வையார் இங்கு முக்தி அடைந்ததாகவும், அங்கு கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு வழிபட்டால் பெண்களுக்கு திருமண பாக்யம், குழந்தை வரம், சிறப்பான வாழக்கை அமையும் என்று பெண்கள் மத்தியில் பலமான நம்பிக்கை உள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு பெண்கள் வழிபாடு நடத்தினாலும் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இங்கு ஆயிரக்கணகான பெண்கள் குவிந்து கொழுக்கட்டை அவித்தும், பாயாசம் வைத்தும் அவ்வையாருக்கு படைக்கின்றனர். மாலை வரை இங்கேயே இருந்து சமைத்து சாப்பிடுகின்றனர். ஆடி செவ்வாய் நாளில் அவ்வையாரை வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக இங்கு வந்த பெண்கள் பலரும் தெரிவித்தனர். ஆடி கடைசி செவ்வாய் தினமான நேற்று இங்கு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும், கொழுக்கட்டை படைத்தும் அவ்வையார் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !