உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பர் பதிகம்

கருப்பர் பதிகம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்ஓம் நமச்சிவாய (என்ற மெட்டு) (ஓம்)

கருப்பர்சாமி கருப்பர்சாமி கருப்பர்சாமி மந்திரம்
கவலைகளைத் தீர்த்துவிடும் கருப்பர்சாமி மந்திரம்

திருப்புத்தூரின் மத்தியிலே திகழ்ந்திருக்கும் தெய்வமே
தினமும் உன்னைக் காண்பவர்க்கு தீர்ந்துவிடும் துன்பமே
சோட்டையிலே கொலுவிருக்கும் கோட்டைக்கருப்ப தெய்வமே
கோபுரமாய்வளங்களெல்லாம் கொண்டுநாளும் தருகவே!

கருப்புநிறக் கச்சையில் கவர்ந்திழுக்கும் ஐயனே
கண்களிலே தீ பறக்க காட்சிதரும் மெய்யனே
மீசையழகை கொண்டஎங்கள் மேன்மைமிகு தெய்வமே
மிதக்கும்புகை நறுமணத்தில் மகிழ்ந்திருக்கும் கருப்பனே!

காலினில் சலங்கைஒலி காததூரம் கேட்குதே
கையரிவாள் வண்ணம்கண்டு கயவர்கூட்டம் ஓடுதே
சுழற்றுகின்ற பிரம்பினிலே சூனியங்கள் தொலையுமே
சுகமான பெருவாழ்வை சுடரவைப்பாய் நாளுமே!

சேவல் கிடாகோழியினைச் சேர்த்து நாங்கள் படைக்கிறோம்
சேர்ந்து ஆடித்திங்களிலே சிரத்தையுடன் பணிகிறோம்
தேவைகளை அறிந்து நீயும் திடத்தைநாளும் அருளுவாய்
சேவைகளை உனக்குசெய்து சிந்தைமகிழ வாழ்த்துவாய்!

பார்க்கும் உன்றன் பார்வையில் பறந்துவிடும் பேய்களே
பாடி ஆடித் தொழுகையில் தொலைந்துவிடும் நோய்களே
நாடிஉன்னைக் காணுகையில் நலங்கள்யாவும் வருகவே
தேடிஉன்னைச் சேருகையில் கோடியின்பம் தருகவே!

சூழ்ந்துநிற்கும் சங்கிலியில் சுடர்விடும் கருப்பனே
வாழ்ந்துவரும் எங்களுக்கு வளமைகளைத் தாருமே!
எங்கள் குலம் நாளுமே இன்பமுடன் வாழ்ந்திட
என்றும் நாங்கள் உனைப்பணிந்தோம் ஏற்றங்களைத் தாருமே!

புரவியிலே அமர்ந்துவரும் புண்ய கருப்பண்ணனே
பறந்துவந்து எங்களையும் பார்த்தருள்வாய் என்றுமே
மணமுவந்து உனைத் துதித்தால் மறுநொடியில் இன்பமே
மங்காத நிலை வாழ்வு மனையுள் நாளும் தாங்குமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !