பத்ர காளியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிச்சட்டி விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில், ஆடிமாத பெருவிழாவையொட்டி பால்குடம், அக்னிச்சட்டி, மயானசூறைத் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர். என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிமாத திருவிழா கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பாரதப் பிரசங்கம் நடத்தப்பட்டது. 15ம் தேதி சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சாமி திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பால்குடம், அக்னிச்சட்டி ஏந்தி 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து, சாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.மதியம் 1:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல், 1:30 மணிக்கு மயானசூறை விடுதல், 3:00 மணிக்கு பத்ர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்தனர். பாரதப்பூசாரி மயில்முருகன் தலைமையில் பாரதப்பிரசங்கம் நடந்தது.