உலகாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா
ஆர்.கே.பேட்டை:உலகாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா, நேற்று நிறைவடைந்தது. இதில், மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரியநாகபூண்டி உலகாத்தம்மன் கோவிலில், 40ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. அன்று, காலை 9:00 மணிக்கு, பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, ராஜேஸ்வரி அலங்காரத்திலும், மறுநாள் மாலை, மீனாட்சி அலங்காரத்திலும், அம்மன் வீதியுலா எழுந்தருளினார். நேற்று, காலை, 8:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில், அம்மன் வீதியுலா எழுந்தருளினார். மூன்று நாட்களாக நடந்த திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், சின்ன நாகபூண்டி, பெரியநாகபூண்டி, அப்புராஜி கண்டிகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.