உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 100 அடிக்கு நிழற்குடை தேவை!

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 100 அடிக்கு நிழற்குடை தேவை!

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவிலில், பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, மேலும் 100 அடிக்கு நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் கந்தசாமி கோவிலில், வேண்டுதல்; திருமணம்; மாத சிறப்பு வழிபாடு என, பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். கோவில் வளாகத்தில், பக்தர்கள் காத்திருக்கவோ, இரவில் தங்கவோ இடவசதி இல்லை. அவர்கள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம், சன்னிதி தெருவில், 2009ம் ஆண்டு, 12.50 லட்சம் ரூபாய் செலவில், 100 அடி நீள நிழற்குடை அமைத்தது. பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில், மேலும், 100 அடி நீளத்திற்கு நிழற்குடையை நீட்டிக்க வேண்டும் என, பேரூராட்சி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. பேரூராட்சி பொதுநிதி, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு துவக்கத்தில் அமைக்க முயன்றபோது, நிழற்குடை கோபுரத்தை மறைக்கும்; சொக்கப்பனை தீயிட இடையூறு ஏற்படும் என, சிலரது மறைமுக தலையீட்டால், கிடப்பில் போடப்பட்டது. இப்பிரச்னையால், குறுகிய நிழற்குடை போதாமல், பக்தர்கள் திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், சன்னிதி தெரு, பேரூராட்சி பகுதி என்பதால், நிழற்குடையை மேலும் நீட்டிக்க எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றனர். இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பக்தர்கள் நலன் குறித்து எதிர்ப்பாளர்களிடம் கூறி சமாதானப்படுத்தி, நிழற்குடை நீட்டிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !