இன்று.. நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் தரும் நாக சதுர்த்தி!
அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாட்டிற்கு சிறப்பிடம் உண்டு. மாரியம்மன் பாம்பு வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம் உண்டு. பாம்பு புற்றை ‘புற்று மாரியம்மன்’ என்ற பெயரிலும் வழிபடுவர். ஆடி வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியான நாகபஞ்சமியும் புற்று வழிபாட்டுக்கு உகந்த நாட்கள். இந்நாட்களில் புற்றுக்கு முன் பொங்கலிட்டும், பால் வைத்தும் வழிபாடு நடத்துவர். இதன் மூலம் நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் பெருகும் என்பர். பாம்பை அம்பிகையின் ஆபரணமாகவும், குடையாகவும் சொல்வதோடு, நாகாத்தம்மன் என்ற பெயரில் வழிபடுவோரும் உண்டு. இவ்வாண்டு ஆடி மாத முடிவில், ஆவணி துவக்கத்தில் வளர்பிறை சதுர்த்தி வருவதால் இன்று நாக சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நாகத்தை சிவன் அணிந்தது ஏன்?: சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே சிவன் நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாகவே தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை சிவலிங்கத்தின் தலையில் ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசை, மனக்குழப்பம் நீங்கி வாழ்வில் நிம்மதி உண்டாகும்.