விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில், வெளி மாநிலத்தவர்கள் கூடாரம் அமைத்து, விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். செப்டம்பர், 17ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காக, விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் சிலைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதால், கடந்த சில வாரங்களாக, குபேர விநாயகர், மூல விநாயகர், சிவன் விநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிழங்கு மாவு உள்ளிட்ட, நீரில் எளிதில் கரையக்கூடிய பொருட்களைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. மூன்று அடி முதல், ஒன்பது அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலைகளின் உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து, விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.