உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,700 ஆண்டு திருச்சின்னம் வாத்தியம்: திண்டுக்கல் கோயிலில் ஒலிக்குது இசை!

1,700 ஆண்டு திருச்சின்னம் வாத்தியம்: திண்டுக்கல் கோயிலில் ஒலிக்குது இசை!

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 1,700 ஆண்டுகால பழமை வாய்ந்த திருச்சின்னம் வாத்தியம் தினமும் ஊதப்படுகிறது. பழங்காலத்தில் வேட்டையின் போதும், கொள்ளையர்களிடம் இருந்து மக்களை காத்துகொள்ள ஊதும் கருவியை சூறைச்சின்னம் என்றும்; கோயில் விழாக்களில் ஊதும் கருவியை திருச்சின்னம் என்றும் கூறுவர். இவற்றின் சிறப்பு சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கருவி 1,700 ஆண்டுக்கு முற்பட்டது. இந்த வாத்தியங்களை தற்போது பயன்படுத்துவது அரிதாகி விட்டது.தற்போது ஒருசில சிவாலயங்களில் மட்டும் திருச்சின்னம் ஊதப்படுகிறது. இதனை பள்ளி எழுச்சி, பள்ளியறை, கும்பாபிஷேகம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்வுகளில் ஊதுகின்றனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் தினமும் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜையின் போது தென்தில்லை செந்தில்குமார் திருசின்னம் வாத்தியம் ஊதுகிறார். அவர் கூறியதாவது: கடந்த 2002 முதல் இவ்வாத்தியம் வாசிக்கிறேன். இந்த கருவி பழங்காலத்தில் தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. தற்போது வெண்கலத்தால் செய்யப் பட்டுள்ளது. உடல்திறன் உள்ளோர் மட்டுமே ஊத முடியும். திண்டுக்கல் மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத்தை துவங்கி சிவாலயங்களில் திருச்சின்னம், உடலை, பிரம்மதானம், நெடுந்தாரை,  குருந்தாரை, கொம்பு, துத்தேரி, சங்கு, சலங்கை போன்ற சிவகண வாத்தியங்களை வாசிக்கிறோம். இசைப்பதற்கு பணம் வாங்குவதில்லை. கடவுள் தொண்டாக செய்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !