எட்டியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்!
பிஞ்சிவாக்கம்: பிஞ்சிவாக்கம், எட்டியம்மன், மாரியம்மன் கோவில்களில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எட்டியம்மன், மாரியம்மன் கோவில்கள். 27 லட்சம் ரூபாயில், புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 19ம் தேதி, காலை 8:30 மணிக்கு, கணபதி, நவக்கிரக ஹோமமும், மாலை 5:00 மணிக்கு கும்பாலங்காரம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. அதன்பின், நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துதலும் நடந்தது. நேற்று, காலை 5:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், அதை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. அதன்பின், காலை 7:45 மணிக்கு, பூர்ணாஹூதியும், அதன்பின் கலசங்கள் புறப்பாடும் நடந்தது. காலை 8:25 மணிக்கு மாரியம்மன் கோவிலும், அதன்பின் எட்டியம்மன் கோவிலில் உள்ள விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலஸ்தானத்திற்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எட்டியம்மன், மாரியம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது. இன்று காலை 7:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு நடைபெறும்.