உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்!

குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்!

உடுமலை : குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் மற்றும் ஸ்ரீராமபட்டிணம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஏழேகால் அடி உயர தாமரை பீடத்தில், புதிதாக ஆண்டாள் நாச்சியார் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, ஆக.,18ம் தேதி காலை, திருவாசகம் முற்றோதலுடன் துவங்கியது. அன்று மாலை, விநாயகர் கோவிலில் இருந்து, புனித தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டு, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர், விநாயகர், ஐம்பூதம், திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி, மண் எடுத்தல், முளைப்பாலிகையிடுதல், காப்பணிவித்தல் நடந்தது.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி நடந்தது. காலை, 7:30 முதல், 8:00 மணிக்குள், ஆண்டாள் நாச்சியாருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது; பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தை சேர்ந்த சிவகணேசன் நடத்தி வைத்தார். காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். சித்தி விநாயகர் கோவில் மடத்துக்குளம், கணியூர், ஸ்ரீராமபட்டிணத்தில் அமைந்துள்ள, சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. முளைப்பாரி பூஜை காப்பு கட்டுதல், வேதபாராயணம், திருமறை ஓதுதல், தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி யாகம், தீபாராதனையும், 7:30 மணிக்கு, சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !