பரனூர் பக்தகோலாகலன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா!
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார் பக்தகோலாகலன் கோவில், ராஜகோபுர கும்பாபிஷேகம் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த பரனுார் பக்தகோலாகலன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு, புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்தகோலாகலன், லட்சுமிநாராயணப் பெருமாள், பக்தபுரீஸ்வரர் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன.
இதற்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணியளவில், கடம் புறப்பாடாகி, ராதிகா ரமண பக்தகோலாகலன் கோவில் மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு, ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் ராஜகோபுரம், கோவில் மூல கலசத்திற்கு, பட்டாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டது.காலை 8:00 மணிக்கு, பக்தபுரீச்வரர் கோவிலுக்கு, சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. உற்சவ மூர்த்திகள், ராதிகாரமண பக்தகோலாகலன், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.