தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 60 ஜோடிகளுக்கு திருமணம்!
வாழப்பாடி: பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத முதல் முகூர்த்த தினமான நேற்று, ஒரே நாளில், 60க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. வாழப்பாடி அடுத்த பேளூரில், புனித நதியாக கருதப்படும் வசிஷ்ட நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமாக, 2,000 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில், தோஷம் நீக்கும் கல்யாண விநாயகர், தாலி பாக்கியம் தரும் வன்னிமரம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. முகூர்த்த தினங்கள் தோறும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடந்து வருகிறது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு, ஆவணி மாதத்தின், நான்காவது நாளான நேற்று, முதல் முகூர்த்த தினம் வந்ததால், அனைத்து பகுதிகளிலும் ஏராளமான திருமணங்கள் நடந்தன. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் திருமணம் செய்து கொள்ள, 50க்கும் மேற்பட்ட ஜோடிகள், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் குவிந்தனர். அதனால், அதிகாலையிலேயே கோவில் களைகட்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், 60க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.