ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி!
ADDED :3810 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆவணி மூல விழாவில் நேற்று, காய்கறிகள், பழங்களால் தோரணங்கள் கட்டப்பட்டு, அன்னப்பாவாடைக் காட்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பாடல் பெற்ற தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் முதல் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில், கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன், அனைத்து விதமான காய்கறிகள், பழங்களால் மூலவர் சன்னிதியில் தோரணங்கள் கட்டி, அன்னப்பாவாடைக் காட்சி வழிபாடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்பின், நேற்று, ஆவணி மூல விழாவில் அதேபோல் வழிபாடு நடந்தது. மேலும், 12 வகையான சாதங்கள், இனிப்பு வகைகளை மூலவர் பெருமானுக்கு படைத்து, பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நண்பகல், 12:00 மணியளவில், ஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.