உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று பவித்ரோத்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று பவித்ரோத்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பவித்ரோத்சவம் விழா இன்று, (26ம் தேதி) துவங்குகிறது. முதல் நாளான இன்று, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை, 9.15 மணிக்கு புறப்பட்டு, 9.45 மணிக்கு யாகசாலை சென்றடைகிறார். 10.30 மணிக்கு திருவாராதனம் கண்டருள்கிறார். மாலை, 5 மணி முதல், 6.30 மணிவரை திருமஞ்சனமும் பிறகு அலங்காரமும் கண்டருள்கிறார். மறுநாள், 27ம் தேதி பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக, யாகசாலை திருவாராதனம் காலை, 7 மணிக்கு தொடங்குகிறது. மூலஸ்தான திருவாராதனம் காலை, 10 மணிக்கு நடக்கிறது. மதியம், 2 மணி முதல் மாலை, 6 மணி வரை மூலவருக்கு நூல்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பூச்சாண்டி சேவையில் நம்பெருமாள் அருள்பாலிக்க உள்ளார். முற்றிலும் நூலினால் செய்யப்படும் இந்த அலங்காரம், பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்துவது போல் காட்சியளிப்பதால், அது பூச்சாண்டி சேவை என்றழைக்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு மேல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 8.15 மணிக்கு திருபவித்ரோத்சவ மண்டபம் வந்து சேருகிறார். அங்கு அலங்காரம் கண்டருளி, 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு, 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வரும், 28ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நம்பெருமாள் மாலை, 6 மணிக்கு பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருள்கிறார். செப்டம்பர், 1ம் தேதி நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்டம்பர், 2ம் தேதி மாலை, 6 மணிக்கு பவித்ரோத்சவ மண்டபத்தில், நம்பெருமாள் எழுந்தருள்கிறார். 3ம் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !