கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்த விழா கோலாகலம்!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் முன்பாக சாபமிட்டு கோபித்துக்கொண்டுசென்ற கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிதரும் வைபவம் நேற்று மானூரில் கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருநாள் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 15ம் தேதி காலையில் கொடியேற்றுத்துடன் துவங்கியது. தொடர்ந்து 18ம் தேதி இரவு 8மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சிறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஆக 23ம்தேதி இரவு 9 மணிக்கு கரூர் சித்தர், திருநெல்வேலியில் எழுந்தருளினார். நெல்லையப்பர் கோயில் முன்பாக நின்று "நெல்லையப்பா.. நெல்லையப்பா.. என சத்தமாக அழைத்தார். சுவாமி அசதியில் இருந்ததால் கருவூர் சித்தரில் குரல் கேட்கவில்லை. சுவாமி வராததால் ஆத்திரமுற்ற கருவூர் சித்தர், நெல்லையப்பர் கோயில் முன்பாக எருக்கும்,குறுக்கும் வளரும்படி சாபமிட்டுச்சென்றார். மானூர் அம்பலவாண சுவாமி கோயிலை சென்றடைந்தார். ஆவணி மூலத்திருநாளின் 11ம் நாளான நேற்று கருவூர் சித்தருக்கு காட்சி தருவதற்காக, நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், அம்பாள், பவானி அம்பாளாகவும், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலியகலிய நாயனார் மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளில் வீதி உலாச் சென்று, மானூர் சென்றடைந்தனர். நேற்று காலை மானூர் அம்பலவாண சுவாமி கோயில் முன்பாக கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிதந்தார். அங்கு சாபவிமோசனம் நிவர்த்தி செய்து வரலாற்று புகழ் மிக்க புராணப் பாடல் பாடல்கள் பாடப்பட்டன. ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கிராமப்புறமான மானூர், நெல்லையில் 15 கி.மீ.,தூரத்தில் அமைந்துள்ளது. கிராமப்புறத்தில் நடந்த பெருந்தெய்வ வழிபாடாகும் இந்நிகழ்வு. இருப்பினும் கிராமப்புற கொடைவிழா போல சுற்றுவட்டார கிராம மக்கள் சிவனை வழிபட வந்திருந்தனர். மானூர் விழாக்கோலம் பூண்டிருந்தது.