திருப்பதி தரிசன டிக்கெட் பெற அடையாள அட்டை கட்டாயம்
ஈரோடு: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கான, "இ-தர்ஷன் டிக்கெட் பெற, அடையாள அட்டை அவசியம் என்று, ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஈரோடு, பெருந்துறை ரோட்டில், ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் இயங்கி வருகிறது. திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்ய, இங்கிருந்து "இ-தர்ஷன் முறையில், டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து, ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் நிர்வாகி உமாபதி கூறியதாவது: கடந்த, 8 ஆண்டாக திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கப்படுகிறது. "இ-தர்ஷன் முறையில் புதிய முறை இன்று (நேற்று) முதல் அறிமுகமாகி உள்ளது. சுதர்ஸன கவுன்ட்டரில் தரிசன டிக்கெட் வாங்க வரும்போது, ஃபோட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டையாக, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மட்டுமே ஏற்று கொள்ளப்படும். கைரேகை பதிவு இல்லை. ஐந்து டிக்கெட்டுக்கு, ஒரு நபர் நேரில் அடையாள அட்டையுடன் வர வேண்டும். தங்கும் வசதி, சேவா டிக்கெட் முன்பதிவுக்கும், இது பொருந்தும். மேலும், 300 ரூபாய்க்கான விரைவு தரிசன டிக்கெட், விரைவில் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.