உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர்ணம் பூசாத விநாயகருக்கு குவியும் "ஆர்டர்கள்!

வர்ணம் பூசாத விநாயகருக்கு குவியும் "ஆர்டர்கள்!

திண்டுக்கல்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடையால் திண்டுக்கல்லில் வர்ணம் பூசாத களிமண் விநாயகர் சிலைகளுக்கு "ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. செப்., 17 ல் விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் வேடப்பட்டி, நொச்சியோடைப்பட்டி, வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் உடுமலைப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிசில் சிலைகளை தயாரிக்க கூடாது. ரசாயன வர்ணங்களை பூசக்கூடாது. எளிதில் சிதையும் களிமண், காகித கூழ் போன்றவற்றால் மட்டுமே சிலை தயாரிக்க வேண்டுமென, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதையடுத்து வர்ணம் பூசாத களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த சிலைகளை வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் "ஆர்டர் செய்துள்ளனர். வேடப்பட்டி எம்.அய்யனார் கூறியதாவது: ஐதீக முறைப்படி சுடாத களிமண் விநாயகர் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும். சிலைகளை சூடு செய்தால் கூட கரையாது. இதனால் நாங்கள் எப்போதும் சுடாத களிமண் விநாயகர் சிலை மட்டுமே செய்கிறோம். வர்ணம் பூச மாட்டோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடால் இந்த ஆண்டு வர்ணம் பூசாத சிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து அதிகளவில் "ஆர்டர்கள் வந்துள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !