உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக கோவில் பணியாளர்கள் பணி நிரந்தர உத்தரவுக்கு தவம்

தமிழக கோவில் பணியாளர்கள் பணி நிரந்தர உத்தரவுக்கு தவம்

கோவில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், என, அரசு தெரிவித்து ஓராண்டு ஆகியும் உத்தரவு பிறப்பிக்கப்படாததால், அதிருப்தியுடன் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் தற்போது பூஜை மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் கோவில் பூசாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக அனுமதிச்சீட்டு தருபவர்கள், எழுத்தர்கள், துப்புரவு பணியாளர்கள், வாட்ச்மேன்கள் என குறைந்தது 7 பேரும், அதிகபட்சமாக 30க்கும் மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். இவர்களில், 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பணி நிரந்தரம் இன்றி தமிழக கோவில்களில் எட்டாயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அரசிடம் பணி நிரந்தரம் கேட்டு, கடந்த 15 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, சட்டசபையில் கோவில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஓராண்டாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இன்னும் கூட கோவில் பணியாளர்கள் பலர், மிகக்குறைந்த தொகையை மாத ஊதியமாக பெற்று வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கோவில் பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், தற்போது நடக்கும் சட்டசபை மானிய கோரிக்கையிலாவது, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கடந்த ஆண்டு சட்டசபையில் கூறப்பட்ட பணி நிரந்தர அறிவிப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !