ஆண்கள் மட்டும் பங்கேற்று மழைவேண்டி நள்ளிரவு பூஜை!
ADDED :3727 days ago
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற கருப்பசாமி கோவிலில், மழைவேண்டி நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. துறையூரை அடுத்த, வெங்கடாசலபுரம் கிழக்கு காட்டில் உள்ள கருப்பசாமி கோவிலில், 22 ஆண்டுகளுக்கு பின் நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் வெங்கடாசலபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள, 10 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு மழை வேண்டியும், இயற்கை வளங்கள் சிறப்படைய வேண்டியும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். இந்த பூஜையின் போது ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஏழு பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இந்த பூஜையில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.