உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பஞ்சலோக 18 படிகள் தயார்!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பஞ்சலோக 18 படிகள் தயார்!

பெங்களூரு: சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள, 18 படிகளில் பதிப்பதற்காக, பெங்களூரில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக தகடுகளாலான படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலின், 18 படிகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

படிகளில் சென்று அய்யப்பனை வழிபட, மாலை அணிந்து, விரதமிருக்கும் பக்தர்கள், கார்த்திகை மாதம் மட்டுமின்றி, மாதந்தோறும் அங்கு செல்கின்றனர். இப்படிகளில், பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தேவ பிரசன்னத்தின் மூலம், 18 படிகளில் பொருத்தப்பட்டுள்ள இப்பஞ்சலோக தகடுகளை மாற்ற, தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக, பெங்களூரிலுள்ள எஸ்.எம்., பவுண்டேஷன் நிறுவன உரிமையாளரும், அய்யப்ப பக்தருமான வினய்குமாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து வினய்குமார், அவரது துணைவியார் ஜெயஸ்ரீ ஆகியோர் கூறியதாவது: கடந்த, 28 ஆண்டுகளாக அய்யப்பனை தரிசிக்க, மாலை அணிந்து விரதமிருந்து செல்கிறோம். கார்த்திகை மாதம், 1ம் தேதியிலிருந்து அய்யப்ப ஜோதி முடியும் வரை, சபரி மலையில் அன்னதானம் வழங்கி வருகிறோம். புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள பஞ்சலோக படிகளில், 108 மணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு படியிலும் இந்த மணிகளின் ஊடே, பத்ம பூ இடம் பெற்றுள்ளது. இதில், சிவன், மகாலட்சுமி, நாகம் வடிவத்தை காணலாம். பஞ்சலோக படிகள் அமைக்கும் பணிகள், மே 25ம் தேதியிலிருந்து, செப்., 4ம் தேதி வரை நடந்தன. இதன் எடை, 4 டன். கடந்த இரு நாட்களாக பெங்களூரில் உள்ள ஏராளமான பக்தர்கள், 18 பஞ்சலோக படிகளை தரிசனம் செய்து வருகின்றனர். தேவசம் போர்டு அனுமதி கொடுத்த பின், படிகள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். படிகளை உருவாக்கிய, சென்னையை சேர்ந்த துரைபாபு கூறுகையில், திருவாபரணம் பெட்டி செய்யும் பாக்யம் கிடைத்ததை பெருமையாக கருதியிருந்தேன். தற்போது பஞ்சலோக படிகள் செய்யும் பாக்யமும் கிடைத்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !