திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்றிரவு துவங்கியது.வைணவ தலங்களில், முதன்மையானதாக கருதப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நாளை, முதல்கட்ட கும்பாபிஷேகம் நடக்கிறது.
கோவில் திருப்பணிகளுக்கு, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருப்பணிகள் முழுமையாக முடிந்த, தெற்கு மற்றும் கிழக்கு கோபுரம் உட்பட, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும், நாளை, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், 43 அடி நீளம், 27 அடி அகலத்தில், யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக சாலை பூஜை, நேற்றிரவு, 7:30 மணிக்கு துவங்கியது. அதில், திருவிளக்கு ஏற்றுதல், இறை அனுமதிபெறுதல், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, மூர்த்திகளுக்கும், விமானங்களுக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நாளை காலை, 5:40 மணிக்கு, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில், பக்தர்களுக்கு தேவையான வசதிகளும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி, பெருமாள் சன்னிதி ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.