தூய ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா: இன்று மாலை தேர் பவனி!
பெங்களூரு:சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு விழாவை முன்னிட்டு, இன்று மாலை தேர் பவனி நடக்கிறது.பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் விடுத்துள்ள அறிக்கை:சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா, ஆண்டு தோறும் ஆக., 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்படுகிறது. அன்று முதல் நவநாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை தமிழ், கன்னடம், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடந்து வருகின்றன. இந்நாளில் கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், மாதாவை தரிசித்து செல்கின்றனர். மாதா பிறப்பு பெருவிழாவில், 50 ஆண்டு பொன்விழா காணும் தம்பதியினருக்கும், நோயாளிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை, 4:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பலிகள் நடக்கின்றன. காலை, 9:30 மணிக்கு ரஸ்ஸல் மார்க்கெட் சதுக்கத்தில் தமிழில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கஉள்ளது.மாலை, 5:30 மணிக்கு மாதாவின் தேர்பவனியும், இரவு, 8:30 மணிக்கு நற்கருணை ஆசியும், அதை தொடர்ந்து, அன்னையின் கொடிஇறக்கம் நடக்கிறது. மாதா திருநாளில் அனைவரும் கலந்து, மாதாவின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.