திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படும் சிற்பங்கள்!
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில், திருப்பணி என்ற பெயரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கும்பகோணம் மகாமகம் விழா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, கும்பகோணம் மற்றும் அதைசுற்றியுள்ள கோவில்களில், கும்பாபிஷேகம் செய்ய, 260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன; அத்துடன் சில கோவில்களில், புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது; இங்குள்ள சிலைகள் கலைநயம் வாய்ந்தவை; வரலாற்று சிறப்புமிக்கவை. சோழர்களின் கலைநயத்தை எடுத்துரைக்கும் இக்கோவிலில், கம்பர் காலத்திற்கு முன் செதுக்கப்பட்ட, ராமாயண சிற்பங்கள் உட்பட, பல பழங்கால சிற்பங்கள், திருப்பணி என்ற பெயரில், தற்போது சிதைக்கப்பட்டு வருகின்றன.
ஆலய வழிபாட்டுக் குழு தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:குடந்தை கீழ்கோட்டம் என அழைக்கப்படும், நாகேஸ்வரன் கோவிலில், 1,200 ஆண்டு பழமையான சிற்பங்கள் உள்ளன. அதிலும், உலக பிரசித்தி பெற்ற ராமாயண சிற்பம் இங்கு தான் உள்ளது. தற்போது, இக்கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. அதில், ராமாயண சிற்பம் சேதமடைந்துள்ளது; இந்த சிற்பத்தில், முன்னர் தெரிந்த பல உருவங்களும், வானரங்களும் தற்போது தெரியவில்லை; பெண் சிற்பங்களும் உடைந்துள்ளன. பன்னிரண்டு சூரியன்களின் அடையாளமாகக் காணப்படும், துவாதச சக்கரம் சேதமாகி உள்ளது. திருப்பணிகளுக்கு முன், தொல்லியல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றனரா என தெரியவில்லை. முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்களிடம் திருப்பணி வேலைகளை கொடுத்திருக்கின்றனர். அதனால், கோவில் சிற்பங்கள் அதிக அளவில் சேதமாகி உள்ளன. இக்கோவில் திருப்பணிக்கு, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இருப்பினும், அதற்கான அரசாணை இல்லை. எனவே, கோவிலின் திருப்பணி வேலைகளை பிரித்து பிரித்து செய்து வருகின்றனர். திருப்பணிக்கு முன் சிலைகள் மீது, ஒரு வித ரசாயனம் பூசப்படுகிறது; அதில், என்ன கலந்திருக்கிறது என, தெரியவில்லை.
திருப்பணியின் ஒரு பகுதியாக, மணல் மூலமும், சில இடங்களில், அதிக அழுத்தத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் சுத்தம் செய்கின்றனர். இப்படி செய்வதால், புராதன சிற்பங்கள் சேதமடைகின்றன. இவ்வாறு அவர் கூறினார். வல்லுனர்கள் மேற்பார்வை தேவை :தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில், திருப்பணி மேற்கொள்ள வேண்டும் எனில், தொல்லியல் துறையின் அனுமதியை, அறநிலையத் துறை பெற வேண்டும். பல கோவில் திருப்பணிகள், தொல்லியல் வல்லுனர்கள் மேற்பார்வையில் தான் நடக்கின்றன. ஆனால், நாகேஸ்வரன் கோவில் திருப்பணியில், தொல்லியல் வல்லுனர்கள் இடம் பெற்றனரா என்பது தெரியவில்லை. அறநிலையத்துறையிடம் சில தொல்லியல் வல்லுனர்கள் இருக்கின்றனர்; ஒருவேளை அவர்களை திருப்பணிக்கு அனுப்பினரா என்பதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.